Pages

Saturday, May 28, 2016

இசைஞானியை பற்றி கேள்விக்கு திரு ஜெயமோகனின் பதில் கண்டிப்பாக படிக்கவும்

மிகையாகப் போற்றப்படுகிறாரா இளையராஜா?
இளையராஜாவின் இசைப் பிரபலம் பற்றி ஒரு சந்தேகம் உண்டு. இளையராஜாவின் இசை ஆளுமைகளைப் ப‌ற்றிக் குறைத்து மதிப்பிடுபவன் அல்ல. இசை நுணுக்கங்களைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. இளையராஜாவிற்கு முன் கேவிமகாதேவன், எம்எஸ்வி போன்றோர்களின் இசை அந்த சமயத்தில் மிக மேம்பட்டே இருந்திருக்கிறது.
இளையராஜாவின் காலத்தில் விஎஸ் நரசிம்மன், தேவேந்திரன், டிராஜேந்தர்(?) போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். ஏஆர் ரகுமான் வருகை வரை இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் குறையாமல் இருந்திருக்கிறது.. ஆனால் இளையராஜாவின் இசை பற்றியே பொதுவெளியில் அதிகம் பேசுகிறோம். இளையராஜாவின் இசைத் திறமைகளைப் பற்றி அதிகப் படுத்திக்கொள்கிறோமா என நான் அடிக்கடி நினைப்பதுண்டு.
இளையராஜாவின் இசை மட்டுமே நமக்குப் பிடித்தமானதாக எப்போதும் இருந்திருக்கிறது. ஏன்? இது பிரமையா அல்லது நிஜமாலுமே அவரது இசை நம்மைக் கட்டிவைத்துவிட்டதா? எம்ஜியார், ரஜினி போன்று பிரபல்யங்கள் மீதான ஈர்ப்பு போன்ற ஒன்றா இது? நரசிம்மன், தேவேந்திரன் போன்றோர்களின் இசையை வேண்டுமென்றே நாம் இருட்டடிப்பு செய்வதாகத் தோன்றுகிறது. சிலரை உதாசீனப்படுத்தி ஒருவரை வேண்டுமென்றே தூக்கிப்பிடிப்பது ஞாயமாகவும் படவில்லை. இந்த எண்ணம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
அன்புடன்
கே.ஜே.அசோக்குமார்.

ஜெ மோ பதில்
அன்புள்ள அசோக்குமார்,
கேளிக்கைத்தளத்தில் எப்போதும் திறமைகள் வந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் அது ஒரு தொழில். மிகப்பெரிய லாபம் உடையது. சமூகமுக்கியத்துவம் கிடைப்பது. ஆகவே அதனுள் நுழையப் பல்வேறு திறமைகள் முட்டிமோதிக்கொண்டிருக்கின்றன. வாய்ப்பு பெறுபவர்கள் நூற்றுக்கொருவர். வெற்றிபெறுபவர்கள் அவர்களில் நூற்றுக்கொருவர். ஆகவே கேளிக்கைக் கலைத்துறையில் உள்ள சாதனையாளர்களின் பட்டியல் எப்போதும் நீளமானதாகவே இருக்கும்.
அதிலும் தமிழ் சினிமாவில் உச்சகட்டக் கலைத்திறன் வெளிப்பட்டது இசையில்தான். ஆகவே அங்கே சாதனையாளர் பட்டியலும் மிக நீளமானது. காரணம் சினிமாவின் பிற துறைகளான இயக்கம், எழுத்து,ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு, நடிப்பு ஆகியவற்றில் நமக்கு முன்வரலாறு கிடையாது. ஆக்கத்தின் தளத்திலும், ரசனையின் தளத்திலும். ஆகவே அவற்றில் சென்ற காலத்தில் மிகப்பெரிய திறமைகள் வெளிப்படவுமில்லை.
தமிழ்த் திரையிசை தனித்துவத்துடன் உருவான நாற்பதுகள் முதலே அதில் சாதனையாளர்கள் வந்துகொண்டே இருந்திருக்கிறார்கள். எவரையும் குறைத்து மதிப்பிடமுடியாது. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் என்னைப் பித்துப்பிடிக்கச் செய்யும் பாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஏன், அதிகம் பேசப்படாத சங்கர் கணேஷ் இசையிலேயே ‘முத்தாரமே உன் ஊடல் என்னவோ’ ‘செந்தாமரையே செந்தேனிதழே’ போன்ற பல பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.
ஆகவே தமிழ்த்திரையிசையை இளையராஜாவிலிருந்து ஆரம்பிப்பதும் சரி, இளையராஜா அன்றிப் பிறரை நிராகரிப்பதும் சரி, அபத்தம். இளையராஜா முன் ஒருவர் அப்படிச் சொன்னால் உடனே எழுந்து போகச் சொல்லிவிடுவார். அவரே தமிழ்த்திரையிசையின் முன்னோடி மேதைகளின் ரசிகர். அவர் முன் அமர்ந்து அவரது குரலில் ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பராமன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றவர்கள் அமைத்த பாடல்களைப் பாடக்கேட்டிருக்கிறேன். அப்போது ராஜாவில் கூடும் பரவசம் ஒரு மறக்கமுடியாத மனச்சித்திரம்.
ஆனால் இந்த ஒளிமிக்க பால்வழியில் இளையராஜா கண்டிப்பாக ஒரு மகத்தான நட்சத்திரம். அவரது முக்கியத்துவம் ஒரு வெற்றிடத்தில் அவர் தோன்றினார் என்பதனால் அல்ல. மாறாக ஒரு மிகப்பெரிய மரபை வெற்றிகரமாக அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றார் என்பதனால்தான் அவர் மகத்தானவராக ஆகிறார்.
நான் இசை விமர்சகன் அல்ல. இசைப்பயிற்சி கொண்டவனும் அல்ல. ஆகவே இசை பற்றி விரிவாக விவாதிக்கத் தயங்குகிறேன். ஆனால் நான் இளையராஜா மிகையாகப் புகழப்படுகிறார் என நினைக்கவில்லை, மாறாக சரியாக இன்னும் ரசிக்கப்படவில்லை, மதிப்பிடப்படவில்லை, கௌரவிக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன்.
இளையராஜா தமிழ்த்திரையிசையில் உருவாக்கிய மகத்தான திருப்பம் என்ன? மீண்டும் சொல்கிறேன், இதை ஒரு நிபுணராக சொல்லவில்லை. நான் சாதாரண ரசிகன். கடந்த ஏழாண்டுக்காலமாக சினிமாவுக்குள் இருக்கிறேன். இன்று சினிமா என்ற கலை எனக்குத்தெரியும். இந்த இரு தகுதியில் இதைச் சொல்கிறேன். ‘இளையராஜாவுக்கு முன்னால் இருந்த இசையமைப்பாளர்கள் சினிமாவில் பணியாற்றிய இசைநிபுணர்கள். இளையராஜா சினிமாவை உருவாக்குவதில் பங்கெடுத்த முதல் இசையமைப்பாளர்’
இந்த வேறுபாட்டைப் பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய மூத்த இயக்குநர்கள் முதல் நவீன இயக்குநர்கள் வரை பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். முந்தைய இசையமைப்பாளர்களுக்கு சினிமாவின் ஒட்டுமொத்த கதையமைப்பு, காட்சிக்கட்டுமானம், கதைமாந்தர்களின் உணர்ச்சிகரம் பற்றிய ஆர்வமோ அறிதலோ இருந்ததில்லை. உண்மையில் மானசீகமாக அவர்கள் சினிமாவுக்குள் இல்லை. அவர்கள் இசையில் மட்டுமே இருந்தார்கள். அவர்களை சினிமாக்காரர்கள் அணுகி தங்களுக்குத் தேவையான இசையை பெற்றார்கள்
அன்றெல்லாம் சினிமா உருவாவதற்கு முன்னதாகவே, ஒரு கருகூட உருவாவதற்கு முன்னரே, அவர்கள் பாடல்களைப் போட்டுவிடுவார்கள். பெரும்பாலும் இயக்குநர் கோரும் தருணங்களை மட்டுமே அவர்கள் அறிந்திருப்பார்கள். அவற்றை மட்டுமே கருத்தில்கொண்டு இசையமைப்பார்கள். அந்தத் தருணங்கள்கூட பெரும்பாலும் எல்லா சினிமாவுக்கும் பொதுதான். காதல் பாடல்,தத்துவப்பாடல், கதாநாயகன் அல்லது கதாநாயகி அறிமுகப்பாடல் என்று.காலப்போக்கில் இன்ன நடிகருக்கு இப்படி, இன்ன இசையமைப்பாளருக்கு இப்படி என ஒரு மனச்சித்திரம் உருவாகிவிடுகிறது. அதைத் தொடர்ந்து செல்வார்கள்.
அபூர்வமான தருணங்கள் வரும்போது அந்தத் தருணத்தை அவர்களுக்கு நன்றாக எடுத்துச்சொல்லி அதற்கேற்ப தகுதியான இசையை அவர்களிடமிருந்து பெறக்கூடிய இயக்குநர்கள் மட்டுமே படத்துடன் சரியாக இயைந்து போகும் பாடல்களைப் பெற்றிருக்கிறார்கள்- மிகச்சிறந்த உதாரணம் ஸ்ரீதர். ஆகவே பல படங்களில் இசை படத்துக்குச் சம்பந்தமில்லாமல் இருக்கும். சிலசமயம் படத்தைவிடப் பலமடங்கு மேலே கூட இருக்கும்.
ஒருபடத்தைப்புரிந்துகொண்டு அதற்காக ஒரு இசைக்கட்டுமானத்தை உருவாக்குவதென்பது அவர்கள் அறியாதது. படத்துக்குள் செல்ல முடியாத காரணத்தால் அவர்கள் அமைத்த பின்னணி இசை என்பது பெரும்பாலும் காட்சிகளை நிரப்புவதாகவே இருந்தது. பெரும்பாலும் இன்னின்ன காட்சிகளுக்கு இவ்வாறு என்று ஒரு இலக்கணம், அல்லது டெம்ப்ளேட் இருந்திருப்பதை அக்காலப் படங்களைக் கண்டால் அறியலாம்.
பெரும்பாலான சமயங்களில் அந்தப் படத்துக்காக அவர்கள் போட்ட ஒரு பாடலை இயக்குநர்கள் ‘தீம் மியூசிக்’ ஆகப் பயன்படுத்திக்கொள்வது வழக்கம். அபூர்வமாக ஸ்ரீதர் போன்ற இயக்குநர்கள் ஒரு தீம் மியூசிக்கைக் கேட்டு வாங்குவதுண்டு.
முந்தைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்குத் திரையிசை என்றால் பாடல்கள் மட்டுமே. ஆகவே பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் இடையே பிரம்மாண்டமான வேறுபாடு இருப்பதைக் காணலாம். தில்லானா மோகனாம்பாள் படத்தின் பாடல்கள் மற்றும் நாதஸ்வர இசை ஒரு தளத்தில் இருக்க, பின்னணி இசை சம்பந்தமே இல்லாமல் இருப்பதை உதாரணமாகச் சொல்லலாம்
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் முந்தைய தலைமுறை இசையமைப்பாளர்கள் படத்தின் கலைபூர்வ கட்டுமானத்தையும் உணர்ச்சிகரத்தையும் உருவாக்குவதில் பங்குபெற்றதே இல்லை.
முதல்படம் முதலே இளையராஜா இதற்கு நேர்மாறானவராக இருந்திருக்கிறார். எப்போதுமே அவர் படத்தை உருவாக்குபவர்களில் ஒருவர். கதையையும், சூழலையும் ,கதாபாத்திரங்களையும் முழுமையாகவும் துல்லியமாகவும் உள்வாங்குவதில் அவருக்கிருக்கும் திறன் அபூர்வமான ஒன்று. ஓர் உதாரணம், சின்னத்தாயி என்ற அதிகம் அறியப்படாத படம். யதார்த்தமான இந்தப்படத்தில் அதன் நெல்லைச்சீமை வாசனையை, அதன் கருவை, உணர்ச்சிகரத்தை அற்புதமாக உள்வாங்கி இசையமைத்திருக்கிறார் ராஜா.
காரணம், பழைய இசைமையமைப்பாளர்கள் மனதளவில் மிக எளிமையான இசைவாணர்கள். வாழ்க்கையின் நுண்ணியதளங்கள் அவர்களுக்குத் தெரியாது. வாசிக்கும்பழக்கம் கொண்டவர்கள் அனேகமாக எவருமில்லை. ஆகவே அவர்களால் ஒருபடத்தின் கதைக்குள் நுழைந்து பங்காற்ற முடிவதில்லை.இளையராஜா மானுட உணர்ச்சிகளை அனுபவம் மூலம் இலக்கியம் மூலம் அணுக்கமாக அறிந்தவர்.
பொதுவாக இசைசார்ந்த நுண்ணுணர்வு மிக்கவர்களுக்குக் காட்சிசார்ந்த நுண்ணுணர்வுகள் மிகக் குறைவாகவே இருக்கும். இளையராஜா அதற்கு அபூர்வமான விதிவிலக்கு என்கிறார்கள். அவரது காட்சியுணர்வும் மிகத்துல்லியமானது. அவரால் ஒரு படத்தை இயக்கவோ எடிட் செய்யவோ முடியும் என்று ஓர் இயக்குநர் ஒருமுறை சொன்னார். இந்த இயல்பு காரணமாக ஒரு படத்தின் கதையைக் கேட்டதுமே அவர் அதன் காட்சிகளைக் கற்பனைசெய்துவிட உதவுகிறது. அந்தக் காட்சியுலகுக்கேற்ற இசையை உடனே அவர் உருவாக்குகிறார்.
இளையராஜா வருகைக்குப்பின் திரைப்படங்களில் இசை ‘சேர்க்கப்படுவது’ இல்லாமலானது. இசையுடன் சேர்ந்தே திரைப்படம் உருவாக்கப்படுவது தொடங்கியது.அவரது பெரும்பாலும் அனைத்துப் படங்களுக்கும் ஓர் இசைத்திட்டத்தை [scheme] அவர் உருவாக்குகிறார். பாடல்களாகவும் தீம்இசையாகவும் அதை அவர் அளிக்கிறார். அது படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்கு அளிக்கிறது.
தமிழில் எடுக்கப்பட்ட பல நல்ல படங்கள் அவரது இசையைப் படப்பிடிப்பில் போட்டுக்கேட்டுக்கேட்டு அதிலிருந்து ஊக்கம்பெற்று எடுக்கப்பட்டவை. உக்கிரமான காட்சிகளின்போது அவரது இசையைப் பின்னணியில் போட்டு நடிப்பை வாங்குவார்கள், இசைக்கு நடிப்பு பொருந்தினால் அது ஓக்கே என்பார்கள். ’நான்கடவுள்’ அப்படி உருவாவதை நான் அருகிருந்து கண்டிருக்கிறேன்.
படங்களின் பின்னணி இசைச்சேர்ப்பை இளையராஜாவுக்கு முன் பின் என்றே பிரிக்கலாம். தமிழின் பெரும்பாலான பெரிய இசையமைப்பாளர்களின் படங்களில் பின்னணி இசை அவர்களின் இசைநடத்துநர்களால் [ஜோசப் கிருஷ்ணா, புகழேந்தி ] அமைக்கப்பட்டதுதான் என்பதை இன்று அனேகமாக அனைவருமே அறிவார்கள்.ஆனால் இளையராஜா படத்தைப் போட்டுப்பார்த்து, அதன் ஒட்டுமொத்ததையும் உள்வாங்கி , ஒவ்வொரு காட்சித்துணுக்கையும் அவதானித்து முழுமையாக ஈடுபட்டுப் பின்னணி இசையமைத்த முதல் இசையமைப்பாளர்.
திரையில் ஓடும் படத்தின் முன் ஒரு இரண்டுவயதுக் குழந்தைபோல கண்பிரமித்து நிற்கும் இளையராஜாவை நான் என் மனதின் அழியா ஓவியமாக வைத்திருக்கிறேன். அவரது முகத்தில் ஒளி நடனமிடும். கண்கள் மின்னும். உணர்ச்சிகள் கொந்தளிக்கும். கண்கள் கலங்கி வழியும். சமயங்களில் படம் ஓடும்போதே சரசரவென இசையை எழுதிக்கொண்டிருப்பார். தமிழின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் அவரது நல்ல படம் ஒன்றைப்பற்றிச் சொல்லும்போது ‘இளையராஜா மட்டும்தான் அந்தப்படத்தை முழுமையாக உணர்ந்து ரசித்தவர்’ என்று சொன்னார்.
பின்னணி இசை காட்சிகளைத் தொகுப்பதும் இடைவெளிகளை நிரப்புவதும் மட்டுமல்ல என்பதை ராஜாவின் இசையே காட்டியது. அது ஒரு அற்புதமான உணர்வுவெளியைப் படத்தின் அடியோட்டமாக எழுதி சேர்த்தது. சில சமயம் காட்சிகளுக்கு விளக்கம் அளித்தது. சிலசமயம் அடுத்தகாட்சிக்குக் கொண்டு சென்றது. சிலசமயம் காட்சிகள்மேல் இளையராஜாவின் மேலதிக அர்த்தத்தை ஏற்றிக்காட்டியது. இன்றும்கூட ராஜா பின்னணி இசையில் செய்ததென்ன என்பதை நம்மவர்களில் ஒரு ஆயிரம்பேர்கூட உணர்ந்ததில்லை என்பதே உண்மை.
மலையாளத்திலும் தமிழிலும் எழுபதுகளில் ஒரேசமயம்தான் சினிமாவில் நவீனஅலை ஆரம்பித்தது. அதுவரை சினிமாவின் காட்சிமொழியில் இருந்துவந்த ஒரு சம்பிரதாயத்தன்மையை உதறி மேலே சென்ற இயக்குநர்கள் உருவானார்கள். அன்றுவரை சில விதிவிலக்கான இயக்குநர்களே காட்சியில் ஏதேனும் புதுமைசெய்திருக்கிறார்கள். மற்றவர்கள் நடிப்பை வாங்குவதே இயக்கம் என நினைத்தவர்கள்.
காரணம் காட்சிகளை இப்படி எடுத்து இப்படித் தொகுத்துக் காட்டினால்தான் ரசிகனுக்குப்புரியும் என்ற ‘இலக்கணம்’ அன்று இருந்தது. ஆகவே இயக்குநர்கள் காட்சியமைப்பை ஒளிப்பதிவாளருக்கும் படத்தொகுப்பாளருக்குமே விட்டுவிடுவார்கள். இயக்குநர்-நடிகர் சிங்கம்புலி ஒருமுறை பழைய எடிட்டர்கள் எப்படிக் காட்சிகளைக் கண்ணால்கூடப் பார்க்காமல் கைப்பழக்கமாக எடிட் செய்வார்கள் என அற்புதமாக நடித்துக்காட்டினார். கீழே விழுந்து சிரித்தோம்.
பழைய படங்களைப்பார்ப்பவர்கள் அதை இன்று தெளிவாக அறிய முடியும். அந்த இலக்கணத்தின் மிகச்சரியான உதாரணங்கள் எம்.ஜி.ஆர் படங்கள், சின்னப்பாதேவர் எடுத்தபடங்கள். வசனங்களில் கூட அந்த இலக்கணம் உண்டு. ஐயம்திரிபறப் புரியவேண்டும் என்பதே குறிக்கோள். ரசிகனின் சராசரி வயது 12 என்ற ஒரு நம்பிக்கை அன்றிருந்தது. திரைக்கதையமைப்பிலும் அந்த இலக்கணம் இருந்தது. அதைமீறி பதினாறு வயதினிலே படம் வந்தபோது அது முடிவடையவில்லை என்று நினைத்து திரையரங்கில் சத்தம்போட்டார்கள்.
அந்த மாற்றம் நிகழ்ந்தபோது அதை ரசிகர்கள் ஏற்க மலையாளத்தில் காரணமாக அமைந்தது காமம். புதுஅலை இயக்குநர்களான பரதன், ஐ.வி.சசி போன்றவர்கள் காமத்தை அபாரத் துணிச்சலுடன் காட்டி இளம்ரசிகர்களைப் படம் பார்க்கவைத்து புதியவகை காட்சிமொழியை அவர்கள் ஏற்கச்செய்தார்கள். அதேசமயம் தமிழில் பாரதிராஜா, தேவராஜ் -மோகன் போன்றவர்கள் எடுத்த புதியவகைக் காட்சிமொழி கொண்ட படங்கள் முழுக்கமுழுக்க இளையராஜாவின் இசையாலேயே மக்களின் ரசனைக்குரியவையாக மாறின. இளையராஜா அந்தப்படங்களின் காட்சிமொழி விட்டுவிட்ட இடங்களை இசைமூலம் நிரப்பிக்காட்டினார்.
இன்றுகூட அதை அப்படங்களைக் காண்கையில் புரிந்துகொள்ளலாம். அதற்கு முந்தைய காலப் படங்களில் உணர்ச்சிகளை நடிப்பாலும் வசனத்தாலும் கொட்டுவார்கள். ஆனால் பதினாறுவயதினிலே அல்லது சிட்டுக்குருவி போன்ற படங்களில் மிகையுணர்ச்சிகள் இல்லை. வெறும் காட்சிகள்தான். அவற்றின் மேல் தவழ்ந்த இளையராஜாவின் இசையே உணர்ச்சிகளைத் தொடர்புறுத்தியது. மிகையுணர்ச்சி நேரடியாக வெளிப்படும் தியாகம் போன்ற படங்களில் ராஜாவின் இசை வேலை இல்லாமல் இருப்பதையும் காணலாம்.
தமிழில் இன்றுவரை நீளும் யதார்த்தசினிமாவின் முன்னோடிகளில் ஒருவர் இளையராஜா என எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் சொல்லலாம். அவர் சிறிய, யதார்த்த சினிமாவுக்கான முதல் ஆதரவாளராக இருபது வருடம் திகழ்ந்திருக்கிறார். அவரிடம் சொல்லப்பட்டு அவரைக் கவர்ந்த காரணத்தாலேயே தமிழில் மிகமுக்கியமானவையாகக் கருதப்படும் பல படங்கள் எடுக்க வழி திறந்திருக்கிறது. பல இயக்குநர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
இத்தனைக்கும்பின்னர்தான் அவரது பாடல்களின் மேன்மையைப்பற்றி பேசவேண்டும். அவரது மெட்டுக்களின் இனிமை பற்றி சொல்லவேண்டியதில்லை. அவர் என்ன புரட்சியைச்செய்தார் என்று மட்டும் பார்த்தால் போதும். நான் இன்றும் தொடர்ந்து அவருக்குமுன்னால் வந்த பாடல்களையே அதிகம் கேட்கிறேன். அவற்றின் முக்கியமான போதாமை என்பது பாடல்வரிகளின் மெட்டுக்கும் பாட்டுக்குள் ஒலிக்கும் இசைக்கோர்வைகளுக்கும் இடையே உள்ள பொருத்தமின்மைதான். நான் மிக விரும்பும் பாடலான ‘பூமாலையில் ஓர் மல்லிகை’- யில் தடதடவென நடுவே இசை அதிர ஆரம்பிக்கும்போது என்ன இது என ஒவ்வொரு முறையும் துணுக்குறுவேன்.
அது இயல்பே. நம் மரபில் பாடல் என்றால் அது மானுடக்குரலால் பாடப்படுவது மட்டும்தான். ஒரு பாடல் ஒரே உணர்ச்சியை சுழற்றிச்சுழற்றி மேலே கொண்டு செல்வதுதான் நம்முடைய இன்னிசை. இசைக்கோவைகளையும் பாடலுக்கு உள்ளே சேர்ப்பது திரையிசையின் காட்சித்தேவை காரணமாக உருவானது. அதைப் பெரும்பாலும் நம்முடைய இசையமைப்பாளர்கள் உள்வாங்கிக்கொள்ளவே இல்லை. அவர்கள் குரலுக்கான மெட்டை மட்டுமே உருவாக்கினார்கள். இசைநடத்துனர் நடுவே உள்ள இசைக்கோவைகளை உருவாக்கினார்.
விதிவிலக்கான பாடல்கள் உண்டுதான். மலையாள இசையில் தேவராஜன் ,எம்.கெ.அர்ஜுனன் இசையில் வந்த சிலபாடல்களைக் குறிப்பிட்டு அவற்றில் உள்ளே உள்ள இசைக்கோவை பாடல்களுடன் இயைந்து போவதைப்பற்றி நண்பர் ஷாஜியிடம் வியந்தேன். அவை ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தையும் முக்கியமான இசையமைப்பாளருமான ஆ.கே.சேகரால் அமைக்கப்பட்டவை என்று அவர் சொன்னபோது மேலே பேசமுடியவில்லை.
இந்தப்பொதுவிதிக்கு விலக்கு என நான் நினைப்பது சலீல் சௌத்ரியைத்தான். சலீல்தாவின் பாடல்கள் ஒற்றைக்கல்சிற்பம் போன்றவை. முழுமையானவை. அவற்றில் உள்ள எப்பகுதியும் நீக்கப்படக்கூடியது அல்ல. பிறிதொன்றுக்கு இடமளிப்பதும் அல்ல. ஒற்றைப்புல்லாங்குழல் இசைக்கீற்று முதல் எங்கோ அதிரும் தனி கித்தார் வரை முழுமையாக இணைந்து ஒன்றாக இருக்கும். அவருக்குப்பின் அந்த முழுமை இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களிலேயே சாத்தியமாகியிருக்கிறது.
இளையராஜாவின் இசையை அனேகமாக தினமும் கேட்பவன் நான். ஒன்று சொல்கிறேன், ராஜாவின் மகத்தான பாடல்களில் நீங்கள் இதுவரை ஒருமுறையேனும் கேட்ட பாடல்கள் பாதிகூட இருக்காது. எவ்வளவோ வைரவைடூரியங்கள் இன்னும் தமிழர்களின் காதுகளில் விழாமலேயே கிடக்கின்றன.
ராஜா தமிழில் எந்த அளவுக்கு மெலடிகள் போட்டிருக்கிறாரோ அந்த அளவுக்கு மலையாளத்திலும் போட்டிருக்கிறார். தமிழைவிட நுட்பமாகக்கூடப் பலபாடல்களை அமைத்திருக்கிறார். அந்தப்பாடல்களில் நீங்கள் தமிழில் அறிந்த இளையராஜாவைக் காணமுடியாது. கேரள இசைக்கருவிகளை கேரள மரபிசையை அறிந்து கேரள மண்ணில் பிறந்து வளர்ந்த ஒருவர் போட்டபாடல்களைப்போலிருக்கின்றன அவை. ஒருவேளை தமிழ்ச்செவிகளுக்கு அவை பிடிக்காமல்கூட போகலாம். ஆனால் அவை கேரளப்பண்பாட்டின் செல்வங்களாக மதிக்கப்படுகின்றன.[உதாரணமாக சில பாடல்களை கீழே கொடுத்திருக்கிறேன்]
இன்னொருவிஷயமும் சொல்லவிரும்புகிறேன். ராஜாவின் பாடல்களை டிவியில் பார்க்காதீர்கள். அவர் அமைத்த பாடல்களின் நுணுக்கமான இசைப்பின்னல்களுக்குச் சம்பந்தமில்லாமல் அபத்தமான காட்சியமைப்புகள் அப்பாடல்களை மறைத்துவிடும். ராஜா இசையில் ஒருபடி முன்னால்சென்றுவிட்டபோதும்கூட தமிழின் பெரும்பாலான இயக்குநர்கள் பழையபாணியிலேயே பாடல்களைக் காட்சியாக்கியிருக்கிறார்கள். குறைந்தது ஒன்றை நீங்கள் கவனிக்கலாம், இளையராஜாவின் பாடலின் இசை கதிமாறி இன்னொரு கட்டத்துக்குச் செல்லும்போதும் அப்பாடலுக்கான காட்சி அப்படியேதான் நீளும். ராஜாவின் இசையை ஒலியாக மட்டுமே கேட்கவேண்டும்- சில முக்கியமான இயக்குநர்களின் படமாக்கல்களைத் தவிர.
உண்மைதான், இளையராஜாவுக்கு வெறிமிக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ராஜாவில் தொடங்கி ராஜாவில் முடிக்கிறார்கள். அது பிழை அல்ல. அது கலையின் இயல்பு. உலகமெங்கும் மகத்தான கலைஞர்களுக்கு அப்படிப்பட்ட ரசிகர்கள் உண்டு.
நான் அவர்களில் ஒருவனல்ல. நான் மிக கறாராகவே எதையும் அணுகவேண்டுமென நினைப்பவன். ஆனால் ராஜாவை நாம் இன்னும் சரியாகக் கேட்கவில்லை, அவர் அளித்ததை முழுக்க பெற்றுக்கொள்ளவுமில்லை என்றே நினைக்கிறேன். அவருக்கு அளிக்கப்படவேண்டிய கௌரவங்களையும் மரியாதைகளையும் ஓரளவுக்குக்கூட தமிழ்ச்சமூகம் அளிக்கவில்லை. இந்நிலையில் அவரது குறைகளை அல்லது போதாமைகளைப்பேச நமக்கு தகுதி இல்லை. ஆகவே என் வரையில் நான் அவற்றுக்குச் செவிகொடுக்க விரும்பவுமில்லை
நன்றி 
ஜெயமோகன்